வயநாடு: வயது நாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நபர், நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனே கிடையாது என்று அலறியடித்துள்ளார்.
தமிழகத்தைப்போல கேரளாவிலும் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள சட்டமன்ற தேர்தலில் 115 இடங்களில் போட்டியிடும், பாரதிய ஜனதா கட்சி, அதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. இதில் பலர், மக்களிடையே செல்வாக்கு இல்லாத நபர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதிக்கு மணிகண்டன் என்பவரை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்து உள்ளது.
இதைக்கண்ட கல்லூரி பேராசிரியரான மணிகண்டன், நான் பாஜக ஆதரவாளர் கிடையாது. அப்படி இருக்கும்போது என்னால் எப்படி பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், தனக்கு தெரிவிக்காமலே, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தான் போட்டியிட முடியாது என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ராகுல் போட்டியிட்டு வெற்றிபெற்ற வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மனன்தாவடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.கே.ஜெயலட்சு என்பவர் போட்டியிடுகிறார். அவரது வெற்றி உறுதியான நிலையில், அங்கு போட்டியிட சரியான நபர் இன்றி தத்தளிக்கும் பாஜக, கல்லூரி பேராசிரியர் ஒருவரை நிறுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்துள்ள நடவடிக்கை கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.