டில்லி

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை அளிக்க ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது

மலேரியா காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் பயன்படுத்தப்படுகிறது.  இந்த மருந்தை கொரோனாவுக்கு சில நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியதனால் இது குறித்த விவரங்கள் வெளி வரத் தொடங்கின.   இந்த மருந்து இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது.

இதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை இருப்பில் வைத்துக் கொள்ள இந்தியாவிடம் அமெரிக்காவுக்கு அனுப்பும்படி கேட்டார்.  ஆனால் இந்த மருந்து இந்தியாவுக்கு அத்தியாவசியமாக உள்ளதால் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்றுமதி தடை விதித்துள்ளது.  அந்த தடையை இந்தியா விலக்க வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவு கெடலாம் என அஞ்சப்பட்டது.    இந்நிலையில் இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதனால் இந்த மருந்து இந்தியாவில் பற்றாமல் போய் விடும் என எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.

இது குறித்து இம்மாத்திரையைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐ பி சி ஏ லாப்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயின், செய்தியாளர்களிடம், “இந்திய அரசு  ஆர்டர் செய்துள்ள அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மருந்தை இந்த மாதமே உற்பத்தி செய்து  அளிக்கத் தயாராக இருக்கிறோம்.

இதுவரை அரசு 6 கோடி மாத்திரைகளுக்கு ஆர்டர் அளித்துள்ளது.  நாங்கள் 10 கோடி மாத்திரை  அளிக்க உள்ளோம்.  இந்த மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் எங்களிடம் 20 டன்கள் உள்ளன.  நமக்கு தற்போதைய தேவை  4 டன்கள் மட்டுமே ஆகும்.   எங்களிடம் உள்ள 6 கோடி மாத்திரை ஆர்டர்களில் 3 கோடி மாத்திரைகள் தயாராக உள்ளது.

இந்த மாதம் எங்களுக்கு மேலும் 20 கோடி மூலப்பொருள் வர உள்ளது.  எனவே நம்மால் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் எவ்வித தடங்கலும் இருகாது.  சுமார் 70-80 நாடுகள் நம்மை நம்பி உள்ளன. அவர்களுக்கு நம்மால் தடை இன்றி அளிக்கமுடியும்  இது தற்போது மிகவும் அவசியமான ஏற்றுமதி ஆகும்.  அவசர நேரத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா பல முறை உதவி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.