சென்னை,
மத்திய மோடி அரசின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்து மார்க்சிய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
அதில், கடந்த 3 ஆண்டுகளில்துறைகள்தோறும் துயரமே எற்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைவதா, இனியும் இரண்டாண்டுகள் இருக்கின்றதே அச்சம் கொள்வதா என எண்ணும் அளவிற்கு தான் மத்திய அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கிறது.
இந்திய மக்களின் மிக பெரும்பாலானோருக்கு வாழ்வு அளித்து கொண்டிருக்கும் விவசாயம் நீண்ட நெடு நாட்களா கவே கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இந்த ஆட்சியிலும் அந்த நெருக்கடி தொடர்கிறது. விவசாய வளர்ச்சி விகிதம் இந்த மூன்றாண்டுகளில் சராசரி 1.7 சதவிகிதம் அளவிற்கே உள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விவசாய விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை கொடுப்போம் என்று அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிவித்ததோடு, இடுபொருட்களின் விலைகள் குறைப்பு, அரசு நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்துதல் ஆகியவை இன்றளவும் முயற்சித்துக் கூட பார்க்கப்படவில்லை.
இதோடு கூட கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை குறைப்பதும், உரிய காலத்தில் மாநில அரசுகளுக்கு இதற்கான நிதியை மறுப்பதும், கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் கடுமையானதாகவும், துயரமிக்கதாகவும் மாற்றியிருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலையளிப்போம் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 2 லட்சத்து 31 ஆயிரம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் இல்லை, அரசு புதிய தொழில்களை துவங்கவில்லை, ரியல் எஸ்டேட் மிக கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏற்றுமதி குறைந்து வருவதில் உற்பத்தி துறையில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தொழிற்துறையிலும், வேலைவாய்ப்புத்துறையிலும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியையும், சரிவுகளையும் மோடி அரசாங்கம் திணித்து இருக்கிறது.
சேவைத்துறையில் புதிய நிறுவனங்கள் வரவில்லை என்பதோடு ஏற்கனவே உள்ள நிறுவனங்களிலும் பணியில் இருப்போரை வெளியில் அனுப்பும் திட்டத்தின் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பதோடு வேலையில் இருந்தவர்களும், வேலையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பல மாநிலங்களில் சிறப்பாக இருந்த பொதுவிநியோக முறை முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. அனை வருக்குமான பொதுவிநியோகம் தான் எங்கள் கொள்கை என்று தேர்தல் அறிக்கையில் எழுதி வைத்துவிட்டு தற்போது பொதுவிநியோகத்தையே சிதைத்துக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் 50 சதவிகிதம் பேருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காது என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ரேசனில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெய்யையும், சர்க்கரையையும் ரத்து செய்ய முயற்சிக்கிறார்கள்.
எதிர்கட்சியாக இருந்த போது ஆதார் ஒரு ஆபத்து என்று கூறியவர்கள் இப்போது அதை கட்டாயமாக்கி பலருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காமல் செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் கார்டுகளுக்கு ரேசன் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 399/- ரூபயாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை தற்போது ரூ. 732/- ரூபாயாக ஏறத்தாழ ஒரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனால் மக்கள் பெறும் மானியத்தின் எந்தவித மாற்றமும் இல்லை. அதுவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்த இந்த காலத்தில் தான் இது நடந்திருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கனை தனியாருக்கு தாரை வார்க்க கங்கனம் கட்டி செயல்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், தனியார்மயமாக்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதன் பலன் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு போய் சேரும் என்று வாய்ப் பந்தல் போட்டார்கள்.
ஆனால் 11 முறை கலால் வரியை ஏற்றி மொத்த கலால்வரியை இரண்டு மடங்காக்கி விலை குறைக்கும் பயனை மக்கள் அனுபவிக்க முடியாமல் கொள்ளையடித்தார்கள்.
தமிழகத்திற்கு துரோகம்
மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, கீழடி அகழாய்வுக்கு தடை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, வர்தா புயல், வறட்சி நிவாரணத்தில் வஞ்சகம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவது, தமிழகத்திற்கான ரேசன் பொருட்கள் வெட்டி குறைப்பு என மாநில உரிமைகளின் மீது அடிமேல் அடியாக தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள்.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளையும் தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது.
கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் முறையில் அருணாச்சலப் பிரதேசம், உத்தராகாண்ட்டில் ஆளுநர்களை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்தார்கள். புதுதில்லியிலும், பாண்டிச்சேரியிலும், தமிழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை, அரசுகளை முடக்குவதற்கும், ஊனமாக்குவதற்கும், சிதைப்பதற்கும் ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் இருந்து எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்பவும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்கும் பசு மாட்டு அரசியலை முன்வைக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஆதரவோடு பசுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் கொலையாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பாஜக அரசியல் லாபத்திற்காக இந்த மோதல்களை உருவாக்கி, வலுப்படுத்தி மக்களை பிளவுபட்டு நிற்க வைக்கிறது. உ.பி. மாநிலம் சஹாரன்பூரிலும், குஜராத்தில் உரியிலும் தலித் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாடறியும்.
இந்தியாவில் கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், எழுத்துச் சுதந்திரம், ஊடக உரிமை இவையெல்லாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர் ஆளுங்கட்சியின் சகோதர அமைப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மிகக் கடுமையாக மிரட்டப்படுகின்றனர்.
இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் தோற்றுப் போன அரசாக அல்லது தேக்கமுற்ற அரசாக வாய்வீச்சில் மட்டும் வாழ்நாளை கழிக்கும் அரசாக மத்திய அரசாங்கம் இருக்கிறது. இவை தவிர செல்லா நோட்டு பிரச்சனை உள்ளிட்டு பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக இந்திய மக்கள் மீதும், சிறு-குறு தொழில்கள் மீதும் தாக்குதலை தொடுத்து வரும் அரசாக உள்ளது.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் இந்த அரசு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை விட்டுக்கொடுக்கப்பட்ட வரி வகை என்கிற வகையில் அள்ளிக் கொடுக்கிறது.
பெருமுதலாளிகள் வங்கியில் வாங்கி ஏமாற்றிய கடன் தொகையை குறைப்போம் என்று சொன்ன இவர்களின் காலத்தில் இந்த தொகை ரூ. 1,73,800 கோடியிலிருந்து, ரூ. 2,21,400 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இப்படி அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், பாதுகாப்பு என்று ஒவ்வொரு துறையிலும் தோற்றுப்போன அம்பலமான அரசாக மோடியின் அரசாங்கம் இருக்கிறது.
இவற்றையெல்லாம் முட்டுக் கொடுக்க பண பலம், அதிகார பலம், அடியாள் பலத்தின் மூலம் எல்லாம் நன்றாய் நடக்கிறது என்று காட்ட முயற்சிக்கிறது.
மொத்தத்தில் இந்திய நாடு இதுவரையிலும் கண்டிராத ஒரு சீரழிவை நோக்கி இந்தியாவை இழுத்துச் செல்கிற மிக மோசமான அரசு என்ற இழுக்கை மோடியின் கடந்த மூன்றாண்டு கால அரசு உருவாக்கியிருக்கிறது.