மதுரை: கோவில்கள், வழிபாட்டு ஸ்தலங்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்து உள்ளது.
சமீபகாலமாக கோயில்களில் நடத்தப்பட்டு வரும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், அருவருக்கும் வகையில், ஆபாசகமாக நடைபெறும். இது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், கோவில்களில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்த தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து, திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில், இரவு நேரத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிகோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி சக்திகுமார் விசாரித்து வந்தார். இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தாத கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி விதித்த நிபந்தனைகளின் படி,
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இடம்பெறக்கூடாது.
அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது.
அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது.
பொதுமக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.
இவ்வாறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.