கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 4,24,845 யூனிட்களை தாங்கள் விற்று அசத்தியிருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்த வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019 டிசம்பரில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 4,24,845 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டும் 4,12,009 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 2018 டிசம்பர் மாதத்தில் ஹீரோ நிறுவனம் 4,36,591 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களை பொருத்தவரை ஹீரோ நிறுவனம் 2019 டிசம்பரில் மொத்தம் 12686 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. முந்தைய ஆண்டில் ஹீரோ நிறுவனம் 17,394 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது.
சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹெச்.எஃப். டீலக்ஸ் மாடலின் பி.எஸ்.6 வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மற்ற வாகனங்களையும் விரைவில் பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.