மேட்டூர்,

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக காவிரி நீரி பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், தமிழகத்தில் பெய்து வரும் மழையாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

மேலும்,  கர்நாடகாவில் உள்ள அணைகள் நிறைந்துள்ளதையடுத்து, அங்கிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்யும் மழையாலும் தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.

இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.

சமீபத்தில் வறண்டு கிடந்த மேட்டூர் அணை, 10 மாதங்களுக்குப் பின்னர் 50 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. அணைக்கு  நீர்வரத்து விநாடிக்கு 21,947 கன அடியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.