சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜய பாஸ்கர், பி.வி ரமணா மீதான குட்கா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர்கள்மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அனுமதி வழங்கிய நிலையில்,  தற்போது சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, அப்போதைய அதிமுக அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்த, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தொடர் நீதிமன்ற விசாரணை நடத்த கவர்னரின் அனுமதி கோரி கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.  அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,   கடந்த , 2022ம் ஆண்டு, செப்டம்பர் 12ந்தேதி அன்று ரமணா மற்றும் விஜய பாஸ்கர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரிய சிபிஐயின் கோரிக்கையை மாநில அரசு கவர்னருக்கு அனுப்பியது.

மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அனுமதி கோரிய ஓராண்டுக்குப் பிறகு, குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிவி ரமணா, சி விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2023 நவம்பரில் அனுமதி அளித்தார்.

இந்த விவகாரத்தில் அப்போதைய காவல் துறை டிஜிபி பெயரும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வழக்கில் குட்கா வியாபாரி மாதவ் ராவ், காவல் துறை அதிகாரி பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  இ ந்த வழக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், சி. விஜய பாஸ்கர், பி.வி ரமணா மீதான குட்கா வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குட்கா ஊழலை விசாரித்த சிபிஐ, “குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.ஜார்ஜ், டி.கே. ஆகியோருக்கு எதிராக மாவா/குட்கா சப்ளையர்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலித்தது தொடர்பான விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.