அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன.
உலகின் 200 நாடுகளில் பரவி கடுமையான பொருளாதார இழப்புகளையும், உயிர்பலிகளையும் ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ் தாக்கம். இந்தியாவிலும் அதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை. மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் அதன் தாக்கம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா தாக்கம் அதிகம்.
ஆனால் அதற்காக மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் உள்ள தொய்வே இப்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி, இந்த விவாகரத்தை கையாள்வதில் தோல்வியடைந்துவிட்டதால் மத்திய அரசு மற்றும் கட்சி தலைமையினால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகத்தில் விஜய் ரூபானிக்கு ஆதரவான அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தும் அனுபவம் வாய்ந்த, திறம்பட செயலாற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சதவீதத்துடன் ஒப்பிடும்போது குஜராத்தின் இறப்பு விகிதம் நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் அல்லது முதலமைச்சரின் அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் அவரது மனைவி அஞ்சலி தலையிடுவது, அதிகாரிகளின் அலட்சியம் உள்ளிட்ட விவகாரங்களை அறிந்த மத்திய அரசு கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான, அதே நேரத்தில் ஆனந்திபென் படேலுக்கு எதிரான இரண்டு அமைச்சர்கள், ரூபானி நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம், செயலற்ற நிர்வாகம் ஆகியவற்றை பற்றி அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்கள் மத்திய அரசுக்கு வரும்முன்பே, ஊடகங்கள் வழியாக ரூபானி மற்றும் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் அலட்சியங்கள் பற்றி டெல்லியில் ஆட்சி தலைமையும், கட்சி தலைமையும் நன்கு அறிந்திருந்தன. அதன் எதிரொலியாக தான் முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த இருவரில் ஜெயந்தி ரவி, தமது கணவரின் வர்த்தகத்தை பற்றியே அக்கறை கொண்டு இயங்கி வந்தார். இது தொடர்பாக பேசிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அரசியல் அடையாளத்துடன் வலம் வரும் அவர் யார் பேச்சையும் செவிமடுக்க மாட்டார் என்றும் கூறினார்.
அமித் ஷாவுக்கு நெருக்கமான பாஜக மூத்த தலைவர் ஒருவர், விஜய் நெஹ்ரா ஊடக ஆர்வலராகிவிட்டார். அவர் தனது வேலையைச் செய்வதற்கு பதிலாக, தன்னை ஒரு செய்தித் தொடர்பாளர் அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி அளவுக்கு குறைத்துக்கொண்டார்.
மேலும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஆர்வம் காட்டுவதும், ட்வீட் செய்வதிலோ தனது பெரும்பாலான நேரத்தையும் வீணடித்தார் என்றார். ஜெயந்தி ரவி மற்றும் விஜய் நெஹ்ரா இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று டெல்லி ஆர்வமாக இருந்தபோது, இந்த முக்கியமான நேரத்தில் இந்த திடீர் இடமாற்றங்கள் முற்றிலும் தவறான சமிக்ஞைகளை அனுப்பும் என்று விஜய் ரூபானி கெஞ்சியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரூபானி ஒரு பலவீனமான தலைவராக இருப்பதை அம்பலப்படுத்தக்கூடும், இடமாற்றங்கள் காரணமாக அவருக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்று பயந்ததாக ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இப்போது கூடுதல் முதன்மை செயலாளர்(வருவாய்) பங்கஜ் குமார், கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை வடிவமைக்க பணிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், நெஹ்ரா வெளியிட்டுள்ள டுவீட்டில், பணியின் போது உடன் இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதாக கூறி இருக்கிறார். தற்போது குஜராத் கடல் வாரியத்தின் தலைவராக இருக்கும் முன்னாள் நகராட்சி ஆணையர் முகேஷ் குமார் பொறுப்பான நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாதில் மட்டும் 73.10 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா பலிகள் பதிவாகி உள்ளன. எனவே உடனடியாக ஒரு அதிரடி நடவடிக்கை அவசியம். இது குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, சூரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை கையாள்வதில் தோல்வி கண்ட ஆட்சியர் தவல்படேலை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ப அரசியல் ஆலோசகர் கே கைலாஸ்நாதன் மற்றும் தலைமைச் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் பொருத்தமான அதிகாரிகளைளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இது அடுத்த அரசியல் லாபிக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது.
வங்கிகள், காய்கறி விற்பனையாளர்கள், மளிகைப் பொருட்கள் அனைத்தும் நாளை முதல் அடுத்த ஒரு வாரம் அகமதாபாத்தில் மூடப்பட வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், அவை 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். சிறைவாசமும் அடங்கும்.
ஆக மொத்தம் கொரோனா விவகாரத்தில் குஜராத்தில் நடைபெறும் அதிகார போட்டி, மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது என்பது மட்டும் நிதர்சனம்.