சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக குஜராத் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி மோசடி செய்த நபரிடம் இருந்து ரூ. 21 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 10 தவணைகளில் மாதம் ரூ. 2 லட்சமாகவும் கடைசி தவணையாக ரூ. 1 லட்சமும் கேட்டதாக புகார் கூறப்பட்டது.
அதேபோல், ஏப்ரல் 4 ஆம் தேதி, சூரத்தில் ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் கிராமவாசியின் நில ஆவணங்களை சரி செய்வதற்கு ரூ.85,000 லஞ்சம் கேட்டுள்ளார். இருப்பினும், கிராமவாசியின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, ரூ. 35,000 முன்பணமாகவும் மீதி தொகையை மூன்று தவணைகளில் சமமாக பிரித்துத்தரவும் கூறியதாக அந்த பஞ்சாயத்து தலைவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தவிர, சபர்கந்தா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் அதில் முதல் தவணையாக ரூ. 4 லட்சம் வாங்கிய இரண்டு போலீசார் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு வழக்கில், சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் அவர் கேட்ட ரூ.10 லட்சம் லஞ்சத்தை நான்கு மாத தவணைகளாகப் பிரித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வீடு, வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மட்டுமே EMI எனும் கடன் தவணை குறித்து கேள்விப்பட்ட நிலையில் லஞ்சப் பணத்தை பெறுவதற்கும் EMI நடைமுறை பயன்படுத்தப்படுவது லஞ்ச ஒழிப்புத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் முதல் தவணையை கொடுத்த பின் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் இதுபோன்ற நூதன முறையில் லஞ்சம் பெரும் அதிகாரிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று குஜராத் காவல்துறை உயரதிகாரி ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.