சென்னை:

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு செப். 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை  16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் 5,575 மையங்களில்  எழுதினர்.

இந்த தேர்வுக்கான முடிவு கடந்த ஆண்டு (2019) நவ. 25ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி அடைந்தவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியானது.

இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்துள்ளனர். குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தேர்வு எழுதிய இவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை  சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதன் மூலம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், சந்தேகங்கள் எழுந்துள்ள  40 பேர்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்  குறித்து டிஎன்பிஎஸ்சி ஆய்வு செய்து வருகிறது. மேலும், வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்றும்,  தரவரிசைப் பட்டியலை சரிபார்த்தபின் இது தொடர்பான விளக்கம் தரப்படும்என்றும் அறிவித்து உள்ளது.