சென்னை: கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்டமர் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.83,467 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
முதன்மைத் தேர்வு முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 மற்றும் பணிகளுக்கு தனி முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். இதில், குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது பேப்பர், பேனா முறையில் நடத்தப்படும். இரண்டாம்தாள், கொள்குறி வகை கேள்விகள் கொண்டது. அதனால், இதை கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால், குரூப்2ஏ தேர்வையும், மழைய முறையிலேயே, அதாவது ஓஎம்ஆர் தாள்களில் நடத்த டிஎனபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஏற்கனவே இந்த தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கான மறுத்தேர்வு டிச.22 ஆம் தேதி ஒளிக்குறி உணரி (ஓஎம்ஆர்) முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் தேர்வு ரத்தான நிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், தேர்வினை ஒளிக்குறி உணரி(ஓஎம்ஆர்) முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
மேலும், தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.