சென்னை: நாளை மெரினாவில் விமானப்படையினரின் சாகசம் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மெரினா கடற்கரைக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் திருவல்லிக்கேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்க்கலாம் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு இந்திய விமானப்படையின் விமான சாகசம் சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த சாக நிகழ்ச்சியின்போது, விமானப்படையினரின்  சாகச விமானங்கள் காலை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.

இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களாக விமான சாகச நிகழ்ச்சிக்கான  ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வந்தது. அது இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை ஒத்திகை பயிற்சி எடுத்தனர். இதைத்தொடர்ந்து நாளை (அக்டோபர் 6ஆம் தேதி) பிரமாண்டமான முறையில்  விமானப்படை சாகச நிகழ்ச்சி காலை 11 மணி – 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு எந்த வழியாக வரவேண்டும், தங்கள் வரும் வாகனத்தை எங்கு நிறுத்த வேண்டும், வெயிலின் தாக்கத்தில் இருத்து தற்காத்து கொள்ளுவது போன்ற முக்கிய அறிவிப்புகள் விமானப்படை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, “நிகழ்ச்சி நடைபெறும் நாளை மறுநாள் லைட்ஹவுஸ் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள காமராஜர் சாலை பொது மக்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வாகனங்களை ராணிமேரி கல்லூரி, லேடி விலிங்டன் வளாகம், மாநில கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.

பின் சாலையை கடந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து விமானப்படையின் சாகசத்தை பார்க்கலாம்.

மேலும் மெரினா கடற்கரைக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் திருவல்லிகேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் விமான சாகச நிகழ்வு அமைந்துள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான படையினரின் சாகசம் நடைபெறும் நேரம் மதிய வேளை என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விமான படை சார்பில் பொது மக்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது. ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையாக குடைகள், தொப்பி மற்றும் தண்ணீர் பாட்டில், சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கடும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான சாகசம் நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் விமான படை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொள்ள உள்ளதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை விமான சாகசக் கண்காட்சியில் இடம்பெறும் விமானங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகாஷ் கங்கா (Akash Ganga):

ஆகாஷ் கங்கா என்பது இந்திய விமானப் படையில் (IAF) இருக்கும் உயரடுக்கு ஸ்கை-டைவிங் குழுவாகும். இந்த குழு அதிக உயரத்தில் இருந்து விறுவிறுப்பான ஃப்ரீ-ஃபால் ஸ்டண்டுகளை செய்கிறார்கள். துல்லியம் மற்றும் ஒருங்கிணைப்பைக் காட்டுகிறார்கள். இவர்களின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சிக்கலான வடிவங்கள் வானில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரிப்பார்கள்.

சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு (Suryakiran Aerobatic Team):

சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம் குறுகிய அமைப்புகளில் பறக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் பார்வையாளர்களை, இவர்களின் சிக்கலான வடிவங்கள் மற்றும் துணிச்சலான ஸ்டண்ட்கள் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

சாரங் ஹெலிகாப்டர் காட்சிக் குழு (Sarang Helicopter Display Team):

சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே டீம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அசத்தலான வான்வழி சார்ந்த திறன்களை வெளிகாட்டுகிறது. ஹெலிகாப்டர்களின் சுறுசுறுப்பு, சிக்கலான நகர்வுகள், வானில் ஏற்படுத்தும் துல்லியமான வடிவங்கள் என அனைத்தும் பார்வையாளர்களுக்கு விருந்தாகும்.

இலகுரக போர் விமானம் (எல்சிஏ) தேஜஸ்:

உற்பத்தியாளர்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
வடிவமைப்பு: ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) மற்றும் HAL ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
வகை: ஒற்றை எஞ்சின், 4.5 தலைமுறை, மல்டிரோல் போர் விமானம்.
முதல் விமானம்: ஜனவரி 4, 2001.
அறிமுகம்: ஜனவரி 17, 2015.
அம்சங்கள்: டெல்டா விங் வடிவமைப்பு, ஃப்ளை-பை-வயர் ஃப்ளைட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட ஏவியோனிக்ஸ்.
மாறுபாடுகள்: தேஜாஸ் மார்க் 1, மார்க் 1ஏ, மற்றும் தேஜாஸ் பயிற்சியாளர்/இலகுரக தாக்குதல் விமானம்.
பயனர்கள்: இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை.
உற்பத்தி: 50க்கும் மேற்பட்ட யூனிட்கள் கட்டப்பட்டுள்ளன, பல்வேறு வகைகளில் குறைந்தது 324 விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலகுரக போர் ஹெலிகாப்டர் (LCH) பிரசாந்த்:

உற்பத்தியாளர்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
வடிவமைப்பு: ப்ராஜெக்ட் லைட் காம்பாட் ஹெலிகாப்டரின் (LCH) கீழ் உருவாக்கப்பட்டது.
வகை: மல்டி ரோல் லைட் அட்டாக் ஹெலிகாப்டர்.
முதல் விமானம்: மார்ச் 29, 2010.
அறிமுகம்: அக்டோபர் 3, 2022.
அம்சங்கள்: அதிக உயரத்தில் செயல்படும் திறன், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் ஆயுதங்கள்.
பயனர்கள்: இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம்.
உற்பத்தி: வரையறுக்கப்பட்ட தொடர் உற்பத்தி, இதுவரை 19 அலகுகள் கட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:

பாரம்பரிய விமானம் (டகோட்டா):

வகை: இராணுவ போக்குவரத்து விமானம்.
உற்பத்தியாளர்: டக்ளஸ் விமான நிறுவனம்.
அறிமுகம்: 1936.
அம்சங்கள்: ட்வின்-இன்ஜின், இரண்டாம் உலகப் போரின் போது துருப்புக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
மரபு: அதன் நம்பகத்தன்மை மற்றும் பல்துறைக்கு பெயர் பெற்ற இது பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது.

ஹார்வர்ட்:

வகை: மேம்பட்ட பயிற்சி விமானம்.
உற்பத்தியாளர்: வட அமெரிக்க ஏவியேஷன்.
அறிமுகம்: 1935.
அம்சங்கள்: இரண்டாம் உலகப் போரின் போது விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒற்றை இயந்திரம்.
மரபு: ஆயிரக்கணக்கான விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அதன் பங்கிற்கு புகழ்பெற்றது, இது ஏர்ஷோக்கள் மற்றும் வரலாற்று காட்சிகளில் பிரபலமான விமானமாக உள்ளது.

தற்போது நடக்கவிருக்கும் விமானக் கண்காட்சியில், இந்திய விமானப்படையின் உயர்நிலை அணிகளாகக் கருதப்படும், வானில் சாகசம் செய்யும் ஆகாஷ் கங்கா, நெருங்கிச் செல்லும் சாகசத்திற்குப் புகழ்பெற்ற சூர்யகிரண், வான்வழி ஹீரோவாகத் திகழும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது தான் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சிறப்புமிக்க அணிகளுடன், தேசத்தின் பெருமையான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நவீன இலகுரக போர் விமானம் தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்கள் ஆகியவை அணிவகுப்பு மற்றும் வான்வழி சாகசக் காட்சிகளில் பங்கேற்கிறது.

நாளை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி – சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு