அரசுப் பள்ளியில் படித்தால்தான்  அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்..

ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் அறிவிப்பே அது.

’’ அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இனி, அரசாங்க வேலை அளிக்கப்பட வேண்டும் ‘’ என்று தனது ஆழ் மனதின் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார், மாதோ. .

‘’ ஜார்கண்ட் மாநில அரசாங்கம் ஒரு பள்ளி மாணவன் படிக்க மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறது. ஆனால் பெற்றோர்களோ, தங்களின் பிள்ளைகளைத் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கப் பள்ளி வாசலில் கியூவில் நிற்கிறார்கள்’’ என்று வேதனையுடன் கூறிய அமைச்சர் மாதோ, ‘’ ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கல்வியின் முன்னேற்றத்துக்கு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.

‘’ தனியார்ப் பள்ளிகளில் படித்தோர், அரசு வேலையில் சேர முயல்வது நல்லதல்ல ‘’ என்று கண்டித்துள்ள கல்வி அமைச்சர் மாதோ,’’ அரசாங்க பணியில் சேர வேண்டுமானால், அரசுப் பள்ளிகளில் சேர்ந்து தான் படிக்க வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சரின் கருத்து , கல்வியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.