டெல்லி: மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக, ஒரு இனத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவை உடனே அகற்றுமாறு டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பப்பட்ட நிலையிலும் கலவரங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ வைரலானது. இந்த கொடுஞ்செயலை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேதி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில், மணிப்பூர் இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோவை உடனே அகற்றுமாறு டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவை நீக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.