சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில், சட்டமேதை அம்பேத்கர் சிலையை  ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று  நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அம்பேர்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான, ராஜ்பவனில் அவரது நினைவை போற்றும் வகையில்  உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார்.  அதனைத் தொடர்ந்து முழு உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உ ள்பட பல  முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஏற்கனவே ராஜ்பவனில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், திருவள்ளுவர், ஒவ்வையார் , மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் உருவ சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.