சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின்,  அரசு விழா மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேறிக வரும்  5ந்தேதி கோவை செல்கிறார். அங்கு  இரண்டுநாள்  முகாமிடும் முதலமைச்சர் பல்வேறு அரசு நிகர்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார்.

அரசின் பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து அவ்வப்போது  மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி  மீண்டும்  தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  அதன்படி தனது முதல் கள ஆய்வுப்பணியை வருகிற 5-ந்தேதி கோவையில் தொடங்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, வரும் 5-ந்தேதி  கோவை செல்கிறார். இரண்டுநாள் அங்கு முகாமிடும் ஸ்டாலின்,  பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அவர் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

இதற்காக வரும் 5ந்தேதி  காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கோவை  விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சி செல்கிறார். அங்கு புதிதாக ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஐ.டி. பார்க்கை திறந்து வைக்கிறார். பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு தங்க நகை தயாரிப்பு தொழிலில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மாலை 5 மணிக்கு போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவில் தங்குகிறார்.

மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவை சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து காந்திபுரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று டவுன் பஸ் நிலையம் பின்புறம் 6.9 ஏக்கரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நூலகம் 7 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது

மதியம் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.  இதற்காக கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி  கோவையில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.