கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிற்சில வன்முறை சம்பவங்களுடன் நேற்று நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, அவற்றை எண்ணும் பணிகளும் உடனடியாக தொடங்கின. தொடக்கத்தில் இருந்தே பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்தார்.
ஆனால், தமிழர் பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்று வந்தார். ஆகவே, இருவருமே முன்னிலையில் இருந்து வந்ததாக அந்நாட்டு அரசு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந் நிலையில், மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்டதன் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சே 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது குறித்த தகவலை டுவிட்டரிலும் வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: இந்த தேர்தலின் வழியாக, இலங்கைக்கு புதிய பயணம் தொடங்கி இருக்கிறது. பிரச்சாரத்தில் ஈடுபட்டதை போன்று, அமைதி, கண்ணியம், ஒழுக்கத்துடன் கொண்டாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக சஜித் பிரேமதாசா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து உள்ளார். 26 ஆண்டு அரசியல் பயணத்தில் உடன் வந்த ஆதரவாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.