கோவாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாடகை கார்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகின்றன என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ மாநில சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், கோவாவில் வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார். இதனால்தான் மாநிலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

95 சதவீத வாடகை கார்கள் மொபைல் செயலி அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்துகின்றன. கோவாவில் எங்கு சென்றாலும் வாடகை கார்கள் எளிதாகக் கிடைப்பதாக அவர் விளக்கினார்.

மேலும், வாடகை கார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோவா போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டுதல்களை வரைவு செய்துள்ளது. அந்த நிறுவனங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு இது இறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கோவாவில் ஓலா, உபெர் போன்ற செயலி அடிப்படையிலான தனியார் டாக்ஸிகளுக்கு அனுமதியில்லை என்பதும் அங்கு அரசு சுற்றுலாத் துறையின் கோவா மைல்ஸ் (GoaMiles) செயலி மற்றும் வழக்கமான டாக்ஸிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.