டில்லி: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்படும் கார்கள், பாதுகாப்பை விரும்புவர்களின் தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கார்கள் விலை அதிகமாக இருப்பதால், இந்தியா போன்ற நாடகளில், சாதாரண பாதுகாப்பில்லாத கார்களின் விற்பனையே அதிகமாக உள்ளது. இதனால் வாகன விபத்தின்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில், சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில், பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு வழங்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கூறிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் , 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமாக வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் வாகனங்களில் பாதுகாப்பு சாதனம் இல்லாததும். இதன் காரணமாக சாலை விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், 2024ல், சாலை விபத்துகளை, 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம்‘ அறிமுகமாக உள்ளது. இத்திட்டத்தில், சர்வதேச வழிமுறையை பின்பற்றி, பாதுகாப்பான கார்களுக்கு அவற்றின் திறனுக்கு ஏற்ப, ஐந்து நட்சத்திரக் குறியீடு வழங்கப்படும். இதற்கான வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, விபத்து சோதனையில் தேர்ச்சி பெறும் கார்களுக்கு, இந்தக் குறியீடு தரப்படும். இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள், பயணியர் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். இத்திட்டம், கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே ஆக்கப்பூர்வமான போட்டியை ஏற்படுத்தும். இதனால், உலகளவில் இந்திய கார்களின் பாதுகாப்பு பற்றி பேசப்படும். ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த குறியீடு அடிப்படையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான கார்களை தேர்வு செய்யலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.