டெல்லி: தேசிய கல்விக்கொள்கையை ஏற்று பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,400 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
திமுக எம்.பி. ராஜாவின் கேள்விக்கு மத்தியஅரசு அளித்துள்ள பதிலில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதன்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி எப்போத ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் , தமிழ்நாடு அரசு 2024-25 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமது உறுதிமொழியை கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அளித்தது. அதன்பின், பள்ளி கல்வி மற்றும் எழுத்துத்திறன் துறை, தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பியது. ஆனால் கடந்த ஜூலை 6-ந்தேதி தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை அனுப்பியது.
அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்தியஅரசு, புதிய கல்விக்கொள்கையின்படி, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
முன்னதாக, தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு எற்று கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு, 2023-24-ம் ஆண்டில் விடுவிக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ரூ.248.29 கோடியை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.2,151.59 கோடியை வழங்காமல் உள்ளது. ஆக மொத்த மத்திய அரசு ரூ.2,399.88 கோடி நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை விடுவிக்க முடியும் என்று கூறி வருகிறது.