சென்னை

மிழகத்தில் கொப்ரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   அந்தந்த  பகுதிகளில் நிலவும் கொரோனா பரவல் எண்ணிக்கையைப் பொறுத்து இது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   இதன்படி தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்,

”முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக,  இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது.  

தவிர தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திட, 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். 

இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

இந்த இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர  கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. தமிழக மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.