கமதாபாத்

லவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கும் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட ’உஜ்வாலா திட்டம்’  குறித்து பாஜக அரசு பல விளம்பரங்களை அளித்து வருகிறது.   இந்த திட்டத்தின் கீழ் சென்ற வருடம் குஜராத் மாநிலத்தில் மட்டும் 20 லட்சம் குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த குடும்பங்களில் மூலம் எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் 22.2% பேர் முதல் முறைக்கு பிறகு சிலிண்டர்கள் வாங்கவில்லை.  அத்துடன் 37.4% பேர் இரண்டாம் முறை மட்டும் சிலிண்டர் வாங்கி உள்ளனர்.   இதற்கு முக்கிய காரணம் மீண்டும் சிலிண்டர் வாங்க போதிய பணவசதி இல்லாததே என பலரும் தெரிவிக்கின்றனர்.

இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு தற்போது பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ரேஷனில் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் லீலாபென் என்னும் பெண்மணி தங்கள் ரேஷன் கார்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் மண்ணெண்ணெய் கிடைத்து வந்ததாகவும் தற்போது அது நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரித்த போது எரிவாயு இணைப்பு உள்ளவர்கள்  பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் கிடையாது என்பதால் அரசு வழங்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடையாது என அரசு உத்தரவு தெரிவிப்பதாக பதில் கிடைத்துள்ளது.   அடுத்த சிலிண்டர் வாங்க பணம் இல்லாத ஏழை மக்களுக்கு தற்போது மண்ணெண்ணெய் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்  அவர்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.

ஒரு சில குடும்பத்தினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட எரிவாயு இணைப்பை திருப்பித் தர முயன்றுள்ளனர்.    தங்களால் அடுத்த சிலிண்டர் வாங்கக் கூட பணம் இல்லாமல் உள்ளதாகவும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான சலுகைகளை மீண்டும் பெற இந்த இணைப்பை திருப்பித் தர முன் வந்துள்ளனர்.  ஆனால் அதற்கு உள்ளூர் நிர்வாகம் மறுத்து விட்டது.

ஆகவே தற்போது எரிவாயு இணைப்புப் பெற்ற பலருடைய வீடுகளில் பழையபடி விறகு மற்றும் வரட்டி உபயோகம் மீண்டும் தொடங்கி உள்ளது.  அத்துடன் வீடுகளில் விளக்கு எரிக்க அவர்கள் மண்ணெண்ணெய் ரேஷனில் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து வெளி சந்தையில் வாங்கி வருகின்றனர்.

இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனமான திஷா அமைப்பை சேர்ந்த பவுலொமீ  மிஸ்திரி இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.  அது மட்டுமின்றி இத்தகைய இலவச எரிவாயு இணைப்பினால் எந்த ஒரு பெண்ணும் பயன் அடையவில்லை எனவும்  மாறாக அதிக துயருற்றுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.