லக்னோ:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (வயது 92) உ.பி. மாநிலம், லக்னோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1991ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
லக்னோ மாநகராட்சி பாபு பனாரசிதாஸ் வார்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. உடல் நலக்குறைவால் வாஜ்பாய் லக்னோவில் நீண்ட காலமாக வசிக்கவில்லை.
அங்கு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அதிகாரி அசோக் குமார் சிங் உறுதி செய்தார்.
வாஜ்பாய் கடைசியாக 2000ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலின்போது லக்னோவில் ஓட்டு போட்டார், அத்துடன் 2004ம் ஆண்டு லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோதும், அங்கு வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
.அவரது பெயர் வேறு எந்த தொகுதியிலும் சேர்க்கப்படவில்லை. முன்னாள் பிரதமருக்கு தற்போது வாக்குரிமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.