லாகூர்: உலகக்கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோகைப் அக்தர்.
அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியிலிருந்து மீண்டு, சிறப்பாக விளையாடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, டாஸ் போட வருகையில், அவரின் தொப்பை நீண்டிருந்ததோடு, அவரின் முகமும் பெருந்திருந்தது. இவ்வளவு மோசமான உடல் தகுதியுடன் இருக்கும் முதல் கேப்டன் இவர்தான். அவரால், எளிதாக அங்குமிங்கும் நகர முடியவில்லை.
அதேசமயம், நமது நாட்டிற்காக ஆடும் இந்த அணியினரை நாம் ஆதரித்தே ஆக வேண்டும்” என்றுள்ளார்.
மேற்கிந்திய அணியுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து வெறும் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்துவிட்டது நினைவிருக்கலாம்.