சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தனி காவல்துறை குழுவை அமைத்தது. அதன் தலைவராக ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்து, அவர் தலைமையில் ஒரு குழு காவல்துறையினர்  சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவ்லகள் வெளியாகின.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கடந்த அதிமுக அரசு பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், அவரை மாற்ற முடியாது என உத்தரவிட்ட துடன், அவரத ஓய்வுக்கு பிறகும் மேலும் ஒரு ஆண்டு பணியை நீடிக்க உத்தரவிட்டது. பின்னர் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஐஜி பொன்மாணிக்க வேல் ஓய்வு பெற்றார்.

முன்னதாக சிலை கடத்தல் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு டிஎஸ்பி காதர்பாட்சாவை பொன்மாணிக்க வேல் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சில ஐம்பொன் சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு காதர்பாட்சாமீது குற்றம் சாட்டப்பட்டது. அவரும் கோயம்போடு இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் என்பவரும் சேர்ந்து, அந்த சிலைகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டு, இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் காதர்பாட்சா தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டு, தற்போது பினையில் உள்ளார்.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிகாரிகளும் மாறினர். சிலை தடுப்பு பிரிவு காவலர்களும் மாற்றப்பட்டனர்.  இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து, காதர்பாட்சா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அவரது மனுவில் பொன்மாணிக்க வேல் தன்மீது பொய் வழக்கு பதிந்ததாகவும்,  சிலை கடத்தல்காரர்களுடன் இணைந்து, காவல்துறை மற்றும் மனிதவள மற்றும் சிஇ அதிகாரிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், காதர் பாட்சாவின் குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.