சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு தடை கோரி முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என சிதறியது. பின்னர் இரு அணி களும் ஒன்றிணைந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதிமுக  விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை நீக்கினர். இந்த நிலையில்,  காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல்  கொடுத்த அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ், இபிஎஸ் தலைமை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து  கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் தன்னை நீக்க பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துகோ அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் புதிய பதவி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தன்னை நீக்கியது செல்லாது என்றும்,   பாஜகவிற்கு எதிராக பேசினால், கட்சியிலிருந்து நீக்குவார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த கே.சி.பழனிச்சாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடமும், டில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அப்போது, கட்சி சம்பந்தமாக எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பு மனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கையெழுத்து போடக்கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடியானது.

இந்த நிலையில், தற்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் மற்றும் உள்கட்சி தேர்தல் தேதியை அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி வரும் 7ந்தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், தொடர்ந்து 13ந்தேதி முதல் உள்கட்சி தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, தேர்தலுக்கு தடை கோரி அவசர மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தன்மீதான தடையை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்,  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த   வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இன்று பிற்பகல் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.