சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் அனாதையாக விடப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை  தி.மு.க.வில்  இணைத்துக்கொண்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அடைக்கலம் கொடுத்துள்ளது.

“திமுகவில் மனமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்” ஒரு தொண்டனாகவே திமுகவில் இணைந்துள்ளேன், தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன்!”  என திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததுடன், தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், திமுக தலைமையும், அதிமுக தலைமையும், மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தமிழக  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் 4 முனை போட்டியாக உருவெடுத்துள்ளது.  அதாவது, தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக தலைமை மற்றும் அதிமுக தலைமை  கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கிடை யில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக இருந்து வந்த ஓபிஎஸ், பல கட்சிகளில் சேர தூது விட்ட நிலையில், யாரும் பிடி கொடுக்க முன்வராததால், திமுகவில் இணைய முடிவெடுத்து, பல முறை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி வந்தார்.

இதற்கிடையில்,   அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி  திமுக, தவெக என  மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர். இதனால் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார்.

இதனால் விரக்தியான ஓபிஎஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம்,  என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது  அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று  வாய்சவடால் விட்டிருந்தார்.

இந்த நிலையில்,  இன்று திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் வரலாற்றில், மூன்று முறை  மாநில முதல்வராக இருந்து வந்த ஒருவர்,  கட்சி மாறி உள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]