சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை மணி நேரம் பார்க்கிங் செய்ய ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும் உயர்வுக்கு விமான பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், பார்க்கிங் வசதி, இப்போது மல்டி-லெவல் கார் பார்க்கிங் (எம்எல்சிபி) வசதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது விமானத்தில் இருந்து வரும் பயணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணிகள் ஏற்கனவே டாக்ஸி போர்டிங் புள்ளியை அடைவதில் சிரமப்படுகின்றனர், வெகுதூரம் நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து, அங்கு வாக்கலேட்டர் அமைக்கப் படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு டிசம்பர் 4ந்தேதி முதல் உடனடி அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையப் பயணிகள் முன்னறிவிப்பின்றி அதிக வாகன நிறுத்தக் கட்டணத்தை எதிர்கொள்கின்றனர். 30 நிமிடங்களுக்கான கார் பார்க்கிங்கிற்கு இப்போது ₹85 ஆகவும், வண்டியின் நுழைவு கட்டணம் ₹40ல் இருந்து ₹45 ஆகவும் உயர்ந்துள்ளது. டெம்போ வேன்கள் ரூ.315 ஆக இருந்தத இப்போது ₹330 ஆகவும், , 24 மணி நேர இருசக்கர வாகனக் கட்டணம் ₹100 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், மல்டி லெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அப்போது, ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்தது. அதில், வாகனங்களை மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் கொண்டு போய் நிறுத்தி மீண்டும் வெளியே எடுத்துக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே தொடர்ந்து கடும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று (டிச.04) புதன்கிழமை முதல் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்களுக்கு, அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை இருசக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே பழைய கட்டணம் ரூ.30-ல் இருந்து புதிய கட்டணமாக 35 ரூபாயாகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95-ல் இருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.