சென்னை: வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதற்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு நடிகர் விஜய் உள்ளான நிலையில், அதுபோல தனுஷ் தொடர்ந்துள்ள  சொகுசு கார் வழக்கில் நாளை நீதிமன்றம் உத்தரவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வெளிநாட்டு சொகுசு காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது தவறு, அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது. ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்வில்லை.

இநத் வழக்கின் கடந்த விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் கூறப்பட்டது.

அதன்படி தனுஷ் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே, இதுபோன்ற வழக்கில், நடிகர் விஜயை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அவருக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.