டெல்லி
இன்று முழுவதும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிபோது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியபோது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையொட்டி மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்., மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்திருந்தார்.
இரு அவைகளும் மீண்டும் தொடங்கியபோது, அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.