மிழ் திரையுலகம் மறக்க முடியாத ’16 வயதினிலே’ படத்தின் நாயகியான ‘மயிலு’ ஸ்ரீதேவின் 4வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது மகள் ஜான்வி கபூர்,  அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தில்  பிறந்து தமிழக திரையுலகம் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு , கன்னட திரையுலகையும் கலக்கியதுடன், பாலிவுட் சென்று இந்தி திரையுலகையும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 50 ஆண்டுகாலம் இந்திய திரையுலகில் வலம் வந்தவர். தெற்கில் பிறந்து வடக்கில் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி 1980ஆம் ஆண்டு காலகட்டங்களில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். பத்மஸ்ரீ உள்பட ஏராளமான விருதுகளை குவித்த ஸ்ரீதேவி  சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.

தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். அவரது 4வது நினைவு தினம் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, 1967ம் ஆண்டு தனது 4 வயதில்,  ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். அவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர். இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தவர், பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் கதாநாயகியாக நடித்த ‘மயிலு’ கேரக்டர் மூலம் பிரலமானார்.  இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துவந்தார்.

ஸ்ரீதேவியின்  நடிப்பையும், அழகையும் கண்ட பாலிவுட் திரையுலக ஜாம்பவான்கள், அவரை இந்தி திரையுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், அவரது பெற்றோர் அடுத்தடுத்து மரணத்தை தழுவியதால், ஆதரவின்றி தவித்த ஸ்ரீதேவிக்கு தோள் கொடுத்தார் போனி கபூர். அதன் பிரதிபலனாக, திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை 1996 ஆம் ஆண்டு ஜூன் 2ந்தேதி திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு அழகான இரு பெண் குழந்தைகள் பிறந்தன.  ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.  அதன்பிறகு, அனில்கபூர் உள்பட சிலருடன் அவர்சில படங்களையும் நடித்து வந்தார்.தொடர்ந்து ஒருசில சீரியல்களில் நடித்து வந்தவர்,  தமிழிலும் நடிகர் விஜய் உடன் ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்தபடம் தமிழ்நாட்டு மக்களிடையே வரவேற்பை  பெறவில்லை. அதனால் வீட்டிலேயே இருந்து தனது கணவர் போனி கபூரின் தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, ‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக ‘பிலிம்பேர் விருது (தெற்கு)’ பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு படத்திற்காக  ‘நந்தி விருது’, பெற்றுள்ளதுடன்,  இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காக “MAMI விருது”ம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

“வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர்  இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது. ‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றவர் ஸ்ரீதேவி.

இவர் தனது குடும்பத்தினருடன், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக  சென்றவர்,  24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கினார்.  பிறகு இரவு உணவு நிகழ்ச்சிக்கு செல்ல தயார் ஆனார்கள். இதற்காக ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக, தண்ணீர் நிரம்பி வழிந்த நிலையில்  குளிக்கும் தொட்டியில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்தியாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த மயிலு ஸ்ரீதேவி இவ்வுலகை விட்டு சென்ற 4 ஆண்டு நினைவு தினம் இன்று.