ராமண்ணா வியூவ்ஸ்:
உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நெகிழ வைத்த முகநூல் பதிவு ஒன்று: 
download
ரு கம்பீர மனிதனை வீழ்த்த, பெற்ற பிள்ளைகளே போதும் என்பதற்கு சோக சாட்சி அந்த எண்பத்தைந்து வயது முதியவர்.
வறுமை சூழலில் பிறந்து, தனது உழைப்பாலேயே படித்து மத்திய அரசில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். முப்பத்தியைந்து ஆண்டு கால கறைபடா பணி வாழ்க்கை.
இரண்டு மகன்கள், ஒரு மகள். தனது தேவைகளைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு ராஜ வாழ்க்கை கொடுத்தவர்.
தெரு விளக்கு எரியவில்லையா, சாலை மோசமாக இருக்கிறதா, குடி நீர் பிரச்சினையா… அதிகாரிகளை ஓடி ஓடிச் சென்று பார்த்து தீர்த்தவர். உற்றார் உறவினர் குடும்பங்களில் பிரச்சினை எல்லாம் நல் ஆலோசனைகள் கூறியவர்.
அதிர்ந்து பேசாத அவருக்கு அத்தனை மரியாதை!
முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று நாவல்களும் எழுதியவர். படைப்புகளில், கருத்து வேண்டும் என்பதில் மட்டும் பழமைக்காரர். “கடவுளை” வணங்குவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை என்ற கொள்கையில் இருந்தவர்.
அவரது அனுக்கத்தோழியாக இருந்த மனைவி மறைந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன.
இவர் கொடுத்த இடத்தில் பக்கதிலேயே வீடுகட்டி் குடியிருக்கும் மூத்தமகன், அப்பாவுக்கு குடிக்க தண்ணீர்தரவும் விரும்பாதவன். இளைய மகன், பரதேசி. அவனுக்கு எவ்வளவோ பொருளுதவி செய்தும் விளங்காதவன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் சமூகத்தோடு ஒட்டி வாழ பழகிக்கொண்டிருக்கிறான். வெளியூரில் இருக்கும் அவன் அழைத்தும், பெரியவருக்கு சொந்த ஊரைவிட்டுச் செல்ல மனமில்லை. ஒரே மகள், திருமணமாகி சென்றுவிட்டள்.
பெரியவருக்கு பணத்துக்குப் பிரச்சினை இல்லை. சொந்த வீடு, கை நிறைய பென்சன்.
ஆனால் அந்த பெரிய வீட்டில் தன்னந்தனியாய் கழியும் முதுமைதான் அவரை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறது.

ராமண்ணா
ராமண்ணா

ஆனால் யாராவது கேட்டால், “ஓ.. மூத்தவன் பக்கத்திலேயே இருக்கானா.. நல்லா கவனிச்சிக்கிறான். சின்னவனும் தினம் போன் செய்து விசாரிப்பான்”. மகளும் மருமகனும் அடிக்கடி வந்து பார்க்கிறாங்க” என்று சிரித்தபடியே பொய் சொல்வார்.
தன் துயரத்தை எப்போதுமே வெளிக்காடாட விரும்பாதவர்.
ஆகவேதான் நான், அவர் பெயரைச் சொல்வில்லை.
சமீபத்தில் அவரைப் பார்த்த போது, “எனக்கென்ன குறைச்சல் ஆண்டவன் இருக்கான், பார்த்துக்கிறான்!” என்றார். கடவுளைப் புகழ்ந்து கவிதை ஒன்றும் எழுதி வைத்திருந்தார்.
தனது நினைவு தெரிந்த நாளிலிருந்து கடவுளை வணங்கமலோ, விமர்சிக்காமலோ இருந்தவர் அவர். ஆனால் கடந்த சில வருடங்களில் அதி தீவிர ஆத்திகராக மாறியிருந்தார்.கடவுளைப் புகழ்ந்து கவிதை எழுதும் அளவுக்கு….!
அது கவிதையா இல்லையா, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் எல்லாம் எனக்கு முழு தெளிவு இல்லை…
ஆனால், சக மனிதன் மீது நம்பிக்கையற்று போய்விட்டார் அந்த மனிதர் என்பது மட்டும் முழுமையாகப் புரிந்தது.