புதுடெல்லி: இந்திய தலைநகரை உலுக்கிவரும் உலகம் காணாத விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடிகள் முதல் ரூ.3500 கோடிகள் வரை நஷ்டம் ஏற்படுவதாக அசோச்சம் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

டெல்லியில், கடந்த சில வாரங்களாக, மாபெரும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், நாட்டின் பல பகுதிகளில், சரக்குப் போக்குவரத்து மற்றும் உணவுப் பொருள் சப்ளை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய மோடி அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் விரைவில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கனவே, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேலும் பெரியளவில் வீழ்ச்சியடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் போராட்டமானது, பஞ்சாப், ஹரியான மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் இணைப்பு பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் இணைப்புப் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.18 லட்சம் கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், சைக்கிள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட தொழில்துறைகளும்கூட, இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.