டில்லி

நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி  நடத்த உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   தலைநகர் டில்லியில் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.   பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்காமல் பிடிவாதமாக உள்ளது.

எனவே தொடர்ந்து போராடுவதாக அறிவித்துள்ள விவசாயிகள் நாளை டில்லியில் டிராகடர்கள் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.   குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு இந்த பேரணி நடக்கும் என விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு டில்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அதையொட்டி டில்லியில் நாளை மதியம் 12 மணிக்குத் தொடங்கும் டிராக்டர் பேரணி மாலை 5 மணிக்கு முடிகிறது.  தற்போது இந்த பேரணியில் கலந்து கொள்ள டில்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, டிக்ரி மற்றும் காஸிபூர் பகுதியில் 25000 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன.  ஆனால் டில்லி காவல்துறையினர் 5000 டிராக்டர்கள் மட்டுமே பேரணியில் கலந்துக் கொள்ள வேண்டும் என விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.