டில்லி
விவசாய சட்டம் தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  பஞ்சாப் மாநிலத்தில் இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த சட்டத்தை எதிர்த்துக் கடந்த செவ்வாய்க்கிழமை பஞ்சாப் சட்டப்பேரவையில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதைப் போல் டில்லி அரசும் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்தார்.  அதற்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்த டில்லி முதல்வர் அமரீந்தர் சிங் இதை ஒரு நாடகம் என விமர்சித்துள்ளார்.  மேலும் அமரீந்தர் சிங் பஞ்சாபுக்கு அரசர் போல செயல்படுவதாக தெரிவித்துள்ள அவர் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு தடை செய்யும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பஞ்சாப் முதல்வர், ”ஆம் ஆத்மி மற்றும் சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் இரட்டை வேடம் ஆச்சரியமாக உள்ளது   அரசின் மசோதாவுக்கு  இரு கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு அளித்து விட்டு வெளியே விமர்சிக்கின்றன.  அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளைக் காக்கப் பஞ்சாப் அரசைப் பின்பற்றி இதைப்போல் மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவா இல்லை எதிரானவரா?  டில்லி என்பது ஒரு மாநிலம் அல்ல என்பதால் அங்குள்ள முதல்வருக்கு மாநிலங்களுக்கு உள்ள சட உரிமைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.  இதனால் நான் கெஜ்ரிவாலின் கருத்தை அதிகம் குறை கூற முடியாது.  அது அவருடைய அறியாமையின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.