பெங்களூரு
பிரபல இங்கிலாந்து செய்தி நிறுவனம் பிபிசி நடத்திய மாதிரி தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை என வந்துள்ள செய்தியை பிபிசி நிறுவனம் மறுத்துள்ளது.
கர்நாடகா தேர்தல் குறித்து பல ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இவற்றை பல பிரபல செய்தி நிறுவனங்கள் நடத்தியதாகவும் கூறப்படுகின்றன. அவ்வகையில் இங்கிலாந்து நாட்டின் பிபிசி நிறுவனம் ஒரு மாதிரி தேர்தலை நடத்தியதாகவும் அதில் பாஜக பெரும்பான்மை பெறும் எனவும் ஒரு தகவல் வெளியானது. அந்த ஆய்வு வெளியானது பிபிசி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இல்லை என்பதால் பலருக்கும் சந்தேகம் உருவானது.
பிபிசி நியூஸ் என்னும் தலைப்பில் வெளியாகி உள்ள இந்த செய்தியில் ”ஜனதாகிபாத் பெருமையுடன் இந்த முடிவுகளை அறிவிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வருகையில் பிபிசி நிறுவனம் அப்படி ஒரு மாதிரி வாக்களிப்பை இந்தியாவில் நிகழ்த்தவே இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. ஜனதா கி பாத் என்பது பாஜகவை சார்ந்த ஒரு அமைப்பு என கூறப்படுகிறது.
பிபிசி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், “பிபிசி நியூஸ் என்னும் பெயரில் கர்நாடகா தேர்தல் குறித்த ஒரு போலி கணக்கெடுப்பு வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இது தவறான செய்தியாகும். இந்தியாவில் எந்த ஒரு தேர்தலுக்கு முந்திய கணக்கெடுப்பு எதையும் நாங்கள் நிகழ்த்தவில்லை.” என அறிவித்துள்ளது.