ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான நியூஸ் ரூம் மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இடையே செய்திகளை வெளியிடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, இது செய்தி நிறுவனங்கள் இடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக ஊடக மற்றும் இணையதள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நாட்டு செய்தியை அவர்கள் தளத்தில் வெளியிட ஆஸ்திரேலிய அரசு சில கட்டுப்பாடுகளை சமீபத்தில் விதித்திருந்தது.
செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்தியை முகநூலில் பதிவிடுவதன் மூலம் வரும் விளம்பர வருவாயை செய்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் அவசர சேவை பிரிவு, அரசு சுகாதார தகவல் உள்ளிட்ட அனைத்து பக்கங்களையும் முடக்கி வைத்திருந்தது.
இதனை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் செய்தி நிறுவனங்களை அழைத்து ஆஸ்திரேலிய அரசு பேச்சு நடத்தியதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான நியூஸ் ரூமுக்கு கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டு மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது,
இந்த ஒப்பந்தம் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு நியூஸ் ரூம் உரிமையாளர் முட்ரோச் நெருக்குதல் கொடுத்ததாக சொல்லப்படும் அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகள் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் வெளிவரும் செய்தித்தாள்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு நியூஸ் ரூம் நிறுவனத்திடம் உள்ளது என்பதும் நியூஸ் ரூம் நிறுவனத்தின் சொந்தக்காரரான ரூபர்ட் முட்ரோச் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முக்கிய பத்திரிகைகளின் உரிமையாளராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இணையதள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தின் அங்கமாக உள்ள செய்தி பகுதியில் பல்வேறு ஊடகங்களின் செய்திகளை வழங்கி அதன்மூலம் விளம்பர வருவாய் ஈட்டி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அரசு விதித்திருக்கும் இந்த நிபந்தனையால் செய்தி நிறுவனங்களுக்கு புதிய அத்தியாயம் தொடங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.