திருப்பதி

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது.

பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.   மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கக் கோவில், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல பொது இடங்களுக்கு மக்கள் வர வேண்டாமென உலக அளவில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   அவ்வகையில் வாடிகன் நகரம், மெக்கா போன்ற பல இடங்களில் மக்கள் வருவது நின்றுள்ளது.

அதே நிலையில் உலகில் அதிகம் பேர் தினசரி வரும் திருப்பதி கோவிலிலும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   மக்களை முன்பு போல் காக்க வைக்காமல் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ரூ.300 சிறப்புத் தரிசன சீட்டு வாங்கியோர் வேறு தினங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயினும் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது  வழக்கம்  போலக் கடந்த வாரம் தினந்தோறும் சுமார் 60000 முதல் 80000 வரை பக்தர்கள் வந்துள்ளனர்   சென்ற வாரமும் கூட்டம் வழக்கம் போல் இருந்ததால் தேவஸ்தான ஊழியர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் திருப்பி அனுப்பி உள்ளனர்.

அதைத் தவிர வெளிநாட்டில் இருந்து வருவோர் 28 நாட்கள் ஆன பிறகே கோவிலுக்கு  வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   ஆனால் பலர் அதை அலட்சியம் செய்து தங்கள் நெடுநாள் ஆவலைத் தீர்க்க கோவிலுக்கு வருகின்றனர்.   எனவே தொடர்ந்து தினசரி 60000 க்கு குறையாமல் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.   தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் இவர்களில் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.