யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கால் இறுதி போட்டிகள் இன்று துவங்கயிருக்கிறது.

நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் ஜெர்மன் அணி தோல்வியடைந்ததை கண்டு பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளம் சிறுமி தேம்பி தேம்பி அழுதாள்.

ஜெர்மன் அணியின் ரசிகை இப்படி அழுவதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள், அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த ரசிகர்கள், இனவெறி கருத்துகளையும் பதிவு செய்தனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் கேரி லினேகர் அந்த சிறுமி அழும் படத்தைப் பார்த்து “இது அருவருக்கத்தக்க இனவெறி செய்கை” என்று பதிவிட்டார்.

சிறுமியை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசியதை பலரும் கண்டித்த நிலையில், சில ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டும், சிலரின் கணக்குகள் முடக்கவும் செய்தனர்.

தங்கள் நாட்டு ரசிகர்கள் இப்படி தரக்குறைவாக நடந்துகொண்டதைப் பொறுக்காத இங்கிலாந்து ரசிகர் ஜோயல் ஹியூக்ஸ் அந்த சிறுமிக்கு இழப்பீடு வழங்குவதற்காக இணையதளம் மூலம் இதுவரை சுமார் ஏழு லட்ச ரூபாய் நிதி திரட்டியிருக்கிறார்.

இந்த நிதியை அந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில் இதனை இனவெறியால் பாதிக்கப்பட்ட வேறு யாருக்காவது வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜோயல் ஹியூக்ஸ்

இங்கிலாந்தின் நியூபோர்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஜோயல் ஹியூக்ஸ், “இளம் வயதில் தானும் இதுபோன்ற இனவெறி பேச்சுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்”.

இந்நிலையில், வரும் ஞாயிறன்று உக்ரைனுக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தை ரோம் நகரில் விளையாட இருக்கிறது இங்கிலாந்து.