ஈரோடு: தமிழக அரசை கண்டித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதனால் ஈரோ ஜவுளி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ரேசன் கடை மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் இங்கு தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு திமுக அரசு, அரசின் விலையில்லா சேலையை பாலிஸ்டர் நூலில் தயாரிக்கும் வகையில் வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
இதை கண்டித்தும், இலவச வேட்டி சேலைகளை பாலிஸ்டர் நூலை தவிர்த்து பருத்தி நூலில் உற்பத்தி செய்யவும், 4,306 மெட்ரிக்டன் பாலிஸ்டர் நூலுக்கான வெளி மாநில கொள்முதல் டெண்டரை ரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். சமீப காலமாக நூலின் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், நடப்பாண்டு திமுக அரசு அரசின் விலையில்லா சேலையை பாலிஸ்டர் நூலில் தயாரிக்கும் வகையில் வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது விசைத்தறி தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், அரசும் அவர்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
அரசின் முடிவை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.