சென்னை: பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஏராளமானோர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் என  முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை  அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களை  உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்புக்குக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான பெண் அதிகாரி, சமூகப் பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உளவியல் வல்லுநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.