டில்லி,
வங்கிகளிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது என்று ரிசர்வ் வஙகி தெரிவித்து உள்ளது. அதுபோல் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய அரசும் அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி இரவு முதல் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க, வங்கிகளிடம் போதிய பணம் இருப்பதாகவும், பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
அதேபோல், “மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்துக்கு எந்த பங்கமும் வராது; யாரும் பீதியடைய வேண்டாம்’ என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்பிஐ செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:.
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்காக, அனைத்து வங்கிகளிடமும் போதிய பணம் கையிருப்பில் உள்ளது.
நாடு முழுவதிலும் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கிகள் வியாழக்கிழமை முதல் பணத்தை மாற்றிக் கொடுத்து வருகின்றன.
எனினும், ஏடிஎம்-களின் செயல்பாட்டை வழக்கமான நிலைக்கு கொண்டுவருவதற்கு, வங்கிகளுக்கு சிறிது காலம் பிடிக்கும்.
எனவே, பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். ஏடிஎம்-களில் வரும் 18-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு ரூ.2,000 வரையும், அதன்பின்னர் நாளொன்றுக்கு ரூ.4,000 வரையும் எடுக்க முடியும்/
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் மட்டுமே, அதுதொடர்பாக வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
சிறு வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் எந்த அச்சமும் இன்றி பணத்தை டெபாசிட் செய்யலாம்.
விவசாயிகளின் வருமானத்துக்கு வரி இல்லை என்பதால், அவர்கள் பீதியடையத் தேவையில்லை.
நேர்மையான குடிமக்களுக்கு எந்த அச்சமும் வேண்டாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்துக்கு எந்த பங்கமும் வராது. என்று கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, வங்கிகளில் இன்றும் கூட்டம் அலை மோதி வருகிறது.. சென்னையில் இன்று அதிகாலையிலேயே ஏடிஎம் வாசல்களில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இன்றும் பல ஏடிஎம் இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.