சென்னை: அரசு பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்பித்தல் திட்டத்தை புழல் அழிஞ்சியம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில், பள்ளிகள் திறக்கப் படும் ஜூன் 13ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்ததிட்டம் 2022-23ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக அரசுமற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குஏற்கெனவேதிறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமான முதல் நாளிலேயே எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கும் நிகழ்வும் அந்த வளாகத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.