சென்னை: அக்டோபர் 10ந்தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அக்டோபர் 25-ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மதிப்பெண்கள் இன்னும் சில நாட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும்நிலையில்,  ஆகஸ்டு1ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் உள்பட தொழில்நுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு குறித்த அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி,  பொறியியல் உள்பட தொழில்நுட்ப படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் 30ந்தேதிக்குள் முடித்து, மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 1ந்தேதி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதேபோல், 2ம் கட்ட கலந்தாய்வு வருகிற அக்டோபர் 10ந்தேதிக்குள் முடித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தொழில்நுட்ப படிப்புகள் சேர்க்கை பெற்று, சேர விருப்பம் இல்லாதவர்கள் தாங்கள் கட்டிய முழுப்பணத்துடன் அக்டோபர் 15ந்தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில் வருகிற அக்டோபர் மாதம் 25ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். 2-ம் ஆண்டு படிப்புகளில் நேரடி சேர்க்கையை அக்டோபர் 30ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.