இம்பால்
ஸ்டார்லிங் செயற்கை கோள் இந்தியாவின் மேல் வரும் போது அலைக்கற்றைகள் அணைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்து வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர்., 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். எனவே மணிப்பூரில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. இதனால் இணையதள சேவை சஸ்பெண்டு செய்யப்பட்டது. ஆயீனும், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.\
இந்திய ராணுவத்தினர் வெளியிட்டு உள்ள சில புகைப்படங்களில், அந்த சாதனங்கள் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டு இருந்ததை தொடர்ந்து, எக்ஸ் பயனாளர்கள் பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வெளியிட்டனர். இந்த சாதனங்களில் ஒன்றில் ஸ்டார்லிங்கின் சின்னம் இடம் பெற்று உள்ளது எனவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது எனவும் பதியப்பட்டது.
எலான் மஸ்க், இது பொய்யானது எனவும் இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் அணைக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்து உள்ளார். செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் வைத்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.