பொன்னேரி

ந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்குக் கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பெருமளவில் அதில் பயணம் செய்தனர்.

ரயில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென மின்சார ரயிலில் உள்ள ‘பான்டோ கிராப்’ என்ற கருவியின் ராடு உடைந்து மின்சார ரயிலை மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பியுடன் இணைக்க முடியவில்லை. ஆகவே மின்சார ரயிலை அதற்கு மேல் இயக்க முடியவில்லை.

எண்ணூரில் 2ஆம், நடைமேடையில் அந்த மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கோளாற்றைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டதால் இதற்குப் பின்னால் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

ஆனால் சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி மற்றும் ஐதராபாத் செல்லும் விரைவு ரயில்களும் வழக்கம்போல் இயங்கின.

சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் கோளாற்றை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை என்பதால் சூலூர்பேட்டையில் இருந்து வந்த மின்சார ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு பழுதாகி நின்ற மின்சார ரயில்களில் இருந்த பயணிகள் அந்த ரயில்களில் ஏறி சென்னை சென்றனர்.

மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் இருந்து டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் மின்சார ரயில் ஆவடி பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பிறகு சூலூர்பேட்டை-சென்டிரல் வழித்தடத்தில் மின்சார ரயில் போக்குவரத்து சீரானது. ரயில் காலதாமதம் தொடர்பாக பொன்னேரி ரயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் இருந்த மின்சார ரயில் முன்பு பயணிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு நிலவியது.