சென்னை: தமிழ்நாட்டில் ஒருமாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் (SIR) நடைபெற்று முடிந்து, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில், இறந்தவர்கள் வாக்கு, போலி வாக்கு, முறைகேடாக பெற்றுள்ள வாக்குகளை அகற்றும் வகையில், மாநிலம் முழுவதும் நவம்பர் 4-ந்தேதி முதல் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களை வீடுவிடாக விநியோகித்து, அதை நிரம்பி தரும் கோரினர். இந்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.) பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கம். அதாவது 15.18% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும், முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது, சென்னையில் S.I.R-க்கு முன் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், S.I.R-க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் உள்ளனர்; 14,25,018 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
S.I.R-க்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி தொகுதியில் 89,241 பேரும் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மாவட்டம் வாரியாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவரம்:
சென்னை – 14,25,018
செங்கல்பட்டு – 7,01,871
கோவை – 6,50,590
திருவள்ளூர் – 6,19,777
திருப்பூர் – 5,63,785
மதுரை – 3,80,474
சேலம் – 3,62,429
திருச்சி – 3,31,787
ஈரோடு – 3,25,429
திண்டுக்கல் – 3,24,894
காஞ்சிபுரம் – 2,74,274
திருவண்ணாமலை – 2,51,162
கடலூர் – 2,46,818
வேலூர் – 2,15,025
திருநெல்வேலி – 2,14,957
தஞ்சாவூர் – 2,06,503
நாமக்கல் – 1,93,706
விருதுநகர் – 1,89,964
விழுப்புரம் – 1,82,865
கிருஷ்ணகிரி – 1,74,549
தூத்துக்குடி – 1,62,527
கன்னியாகுமரி – 1,53,373
தென்காசி – 1,51,902
சிவகங்கை – 1,50,828
ராணிப்பேட்டை – 1,45,157
புதுக்கோட்டை – 1,39,587
திருவாரூர் – 1,29,480
தேனி – 1,25,739
ராமநாதபுரம் – 1,17,364
திருப்பத்தூர் – 1,16,739
கள்ளக்குறிச்சி – 84,329
தர்மபுரி – 81,515
கரூர் – 79,690
மயிலாடுதுறை – 75,378
நாகப்பட்டினம் – 57,338
நீலகிரி – 56,091
பெரம்பலூர் – 49,548
அரியலூர் – 24,368
மொத்தம் நீக்கப்பட்டவர்கள் – 97,37,832
சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள்:
1.ஆர்.கே.நகர் தொகுதி – 32,501
2.பெரம்பூர் தொகுதி – 97,345
3.கொளத்தூர் தொகுதி – 1,03,812
4.வில்லிவாக்கம் தொகுதி – 97,960
5.திரு.வி.க. நகர் தொகுதி – 59,043
6.எழும்பூர் தொகுதி – 74,858
7.ராயபுரம் தொகுதி – 51,711
8.துறைமுகம் தொகுதி – 69,824
9.சேப்பாக்கம் தொகுதி – 89,241
10.ஆயிரம் விளக்கு தொகுதி – 96,981
11.அண்ணாநகர் தொகுதி – 1,18,287
12.விருகம்பாக்கம் தொகுதி – 1,10,824
13.சைதாப்பேட்டை தொகுதி – 87,228
14.தியாகராயநகர் தொகுதி – 95,999
15.மயிலாப்பூர் தொகுதி – 87,668
16.வேளச்சேரி தொகுதி – 1,27,521
வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லை என்பதற்காக பதற்றம் அடைய வேண்டாம் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையர், பெயர் இல்லாத வாக்காளர்கள், முதலில், தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு வாக்காளர்கள் பார்வையிடலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாக சேருபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இணைந்து கொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும்.
தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://electoralsearch.eci.gov.in/
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், அந்த பகுதி பிஎல்ஓக்களை அணுகலாம்; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்;
வாக்குச் சாடிவகளிலேயே முகாம்கள் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொதுமக்களே எளிதாக அறிவதற்கு தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
அதன்படி, தேர்தல் ஆணையத்தின் Voters.eci.gov.in என்ற இணையதள முகவரியை அணுகி, உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை உங்களது பெயர் அந்த பட்டியலில் இல்லாவிட்டால், நீக்கப்பட்டதற்கான காரணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்கள் வாயிலாக அறியலாம்.
பெயர் இல்லாதவர்கள், மீண்டும் அப்ளை செய்யலாம்
ஒருவேளை வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்றும், வரைவுப் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறையின் போது சேர்க்கப்படலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18ம் தேதி வரை தெரிவிக்கலாம்
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
அவற்றை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டால், உங்களது பெயர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறக்கூடும்.
[youtube-feed feed=1]