டெல்லி: இன்று நாடு முழுவதும் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நாட்டின் எந்தவொரு வாக்குசாவடியிலும், எந்தவொரு பகுதியில் உள்ள தொகுதிக்கும் வாக்களிக்கும் வகையிலான திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது, அதற்கான ஆய்வுத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
11 வது தேசிய வாக்காளர் தினத்தைக் குறிக்கும் வகையில் சுனில் அரோரோ வெளியிட்டுள்ள செய்தியில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர வாக்களிப்பு குறித்த ஆராய்ச்சி திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர் களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள். தேர்தல் நடைமுறை ஊக்குவிப்பதற்காகவும் இந்தநாள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வெளியிட்டுள்ள வாக்காளர் தினச்செய்தியில், வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் அதற்கான உரிமையை பெற்று இருந்தால், நாட்டில் எங்கிருந்தும், எந்த வாக்குச்சாவடியிலும் தனது வாக்கை செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எந்த வாக்குச்சாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான மாதிரி ஓட்டுப்பதிவு விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சி சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் சோதனை அடிப்படையில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.