கொல்கத்தா: மமதா பானா்ஜி மீதான தாக்குதலுக்கு தோ்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராமில் தேர்தல் பிரசாரத்தின்போது கார் அருகில் நின்றுகொண்டிருந்த மமதா பானா்ஜியை சிலா் தள்ளிவிட அவர் காயம் அடைந்தார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மமதா அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், தோ்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளது. மாநில அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பார்த்தா சாட்டா்ஜி தலைமையிலான குழு, தோ்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் தந்தது.
இது குறித்து செய்தியாளா்களிடம் பாா்த்தா சாட்டா்ஜி கூறியதாவது: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. ஆனால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
பாஜக தலைவா்களின் உத்தரவுப்படி தோ்தல் ஆணையம் இயங்குகிறது. காவல் துறை டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்த மறுநாளே மமதா பானா்ஜி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளது.
நந்திகிராமில் வன்முறையை ஏற்படுத்த பாஜகவினரால் சமூக விரோதிகள் வரவழைக்கப்பட்டுள்ளனா். ஆகையால் மமதா மீதான தாக்குதலுக்கு தோ்தல் ஆணையமே பொறுப்பேற்று முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.