மதுரை:

ல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது.

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன்களை வழக்க மத்திய மாநில அரசுகள் வங்கிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், வங்கிகளோ, மாணவர்களுக்கு கல்விக்கடன்களை கொடுப்பதில் பல கெடுபிடிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி தொட்டியம்பட்டி கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,  தனது மகள் படிப்புக்காக  கோவில்பட்டி பாண்டியன் கிராம வங்கியில் 2016-ம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகளின் படிப்பை கருத்தில் கொண்டு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில்  நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி மன்றம்,  கல்விக்கடன் தொடர்பான வழக்குகளில் விதிகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  மனுதாரரின் மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே அவரது விண்ணப்பத்தின் மீது 2 வாரத்தில் உரிய உத்தரவை வங்கி நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.